திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்த கனமழையால் உப்பிலியபுரம் மின்னல் தாக்கி 50 நெல் மூட்டைகள் எரிந்தது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. திருச்சி நகரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் கண்டோன்மெண்ட், பாலக்கரை, மத்திய பஸ் நிலையம், மலைக்கோட்டை தில்லைநகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதியிலிருக்கும் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
துவரங்குறிச்சி பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டின் மேற்கு பகுதியில் மரம் விழுந்ததால் மேற்கூரையை சேதமடைந்துள்ளது. அந்த வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
உப்பிலியாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் சூறைக்காற்றுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் பழனியாண்டி என்பவரின் தோட்டத்தில் மின்னல் தாக்கி தென்னைமரம் தீப்பிடித்தது. அவரின் தோட்டத்தின் கொட்டகையிலும் தீப்பிடித்தது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். ஆனால் கொட்டகையில் இருந்த 50 நெல் மூட்டைகள், 20 உர மூட்டைகள், 300 தேங்காய், 200 சாக்குகள் எரிந்து நாசமானது.