நிதி நிறுவனம் நடத்தி ரூபாய் 28 கோடியை மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திரண்டு மனு கொடுத்தார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட தேவானங்குறிச்சி கீழேரிபட்டியை சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திரண்டு மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள் பகுதியில் ஒரு தம்பதியினர் சென்ற 30 வருடங்களாக நிறுவனம் நடத்தி வந்த நிலையில் அவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி 250 க்கும் மேற்பட்டோர் சுமார் 28 கோடியை முதலீடு செய்தோம். அதற்கு ஆதாரமாக நிதி நிறுவனத்தின் பெயரில் ப்ரோ நோட் மற்றும் காசோலைகளை கொடுத்தார்கள்.
இந்நிலையில் அந்த நிறுவனத்தை நடத்தி வந்த நபர் தனது குடும்பத்தின் பெயரின் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்கி பாதுகாப்பு செய்துவிட்டு சென்ற 2020 ஆம் வருடம் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரின் மனைவி மற்றும் மகனிடம் பணத்தை கேட்ட பொழுது பணத்தை தந்து விடுகிறோம் என உறுதி அளித்தார்கள். அதை நம்பி நாங்கள் இருந்த நிலையில் தற்பொழுது பணத்தை தராமல் காலம் கடத்தி வருகின்றார்கள். அதையும் மீறி பணம் கேட்டு வந்தால் அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவோம் என மிரட்டுகிறார்கள். தற்பொழுது அந்த நிதி நிறுவனம் பதிவு செய்யாமல் மோசடி செய்யும் நோக்கத்துடன் நடத்தி வந்தது எங்களுக்கு தெரியவந்துள்ளது. ஆகையால் எங்களை ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.