திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியை அதிமுக 7 முறையும், திமுக 3 முறையும் கைப்பற்றியுள்ளன. காங்கிரஸ் 3 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர் தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதய எம்.எல்.ஏ அதிமுகவின் பொன். சரஸ்வதி. திருச்செங்கோடு தொகுதியில் மொத்தம் 2,30,316 வாக்காளர்கள் உள்ளனர். திருச்செங்கோட்டில் ரிக் வாகன தயாரிப்பை மேம்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருச்செங்கோடு-சங்ககிரி சாலையில் லாரி கட்டுமான தொழிலை ஒருங்கிணைத்து ஆட்டோ நகர் அமைக்க வேண்டும் என்பது தொழில்முனைவோரின் வேண்டுகோளாகும். சங்ககிரி ரயில்வே மேம்பாலத்தில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என்பது லாரி உரிமையாளர்களின் வேண்டுகோளாகும். விளை பொருள்களுக்கான குளிர்பதன கிடங்கு தேவை என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாகும். திருமணிமுத்தாறு காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த திருச்செங்கோடு நகரை சுற்றி சுற்றுவட்டார சாலை அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கலை கல்லூரிகள் உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். அர்த்தநாரீஸ்வரர் மலைக்கு செல்ல மற்றொரு பாதை அமைத்துத் தர வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். திருமண மண்டபம் அமைத்து தரவேண்டும் எனவும் மக்களின் விருப்பமாக உள்ளது.