அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆறு தினங்களில் திருக்கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து சூரசம்காரத்தை கண்டு விரதம் முடிக்கின்றார்கள். இந்த நிலையில் 2021 2022-ம் வருடம் இந்து சமய அறநிலைய துறையின் மானிய கோரிக்கையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 150 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல் படி முழுமையான திருப்பணிகள் மற்றும் இதரப் பணிகள் பெருந்திட்ட வரைவு திட்டத்தின் படி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உபயதாரர் வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் 200 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில் உட்கட்டமைப்பு மற்றும் திருக்கோயில் நிர்வாகத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், மேம்படுத்துதல், காத்திருப்பு அறை, நடைபாதை, மருத்துவ மையம், முடி காணிக்கை செலுத்தும் இடம், பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறை, ஓய்வு அறை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு மேம்பாட்டு பணிகள் என மொத்தம் 300 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருக்கின்ற திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதி பணிகளை முதல்வர் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
அதே போல திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா பணிகளும் இத்துடன் ஒருங்கிணைந்து நடைபெற இருக்கிறது. இந்த திட்டத்திற்கான தொடக்க விழா புதன்கிழமை காலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட 1951 ஆம் வருடம் முதல் இது நாள்வரை இவ்வாறான மிகப்பெரிய திருப்பணி மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும். இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு பி கே சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி, தலைமை செயலாளர் வெ இறையன்பு, இ ஆப சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி சந்திரமோகன், இலாப இந்து அறநிலையத்துறை ஆணையர் திரு ஜே குமரகுருபரன், hcl நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் திருமதி ஸ்ரீமதி சிவசங்கர், திரு சுந்தர் மகாலிங்கம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் திருச்செந்தூரிலிருந்து காணொளி காட்சி வாயிலாக மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினர் திரு சீ சண்முகையா போன்ற பல அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.