தமிழகத்தில் கோயிலுக்குள் யாகங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என்றும், கோயிலுக்கு வெளியே யாகங்கள் நடைபெற விதிகளை வகுக்க அரசுக்கு அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரத்தில் விரதம் இருக்கும் பக்தர்களை அனுமதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெளியே கந்த சஷ்டி விரதம் இருக்க அனுமதி அளித்த அரசு நிலைப்பாடு சரியே என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் நீதிபதிகள் பல கருத்துக்களையும், உத்தரவுகளையும் நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.
அதன்படி, திருப்பதி கோயிலில் உள்ள கட்டுப்பாடுகளைப் போலவே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கட்டுப்பாடுகளை வைக்க வேண்டும். திருச்செந்தூர் கோயிலில் பணம் கொடுத்தால் உடனடியாக சாமி தரிசனம் செய்ய முடிகிறது, எந்த கோயிலும் பணக்காரர்களுக்கானது அல்ல. கடவுள் அனைவருக்கும் சமமானவர்.. தமிழகத்தில் கோயிலுக்குள் யாகங்கள் நடத்த அனுமதிக்க கூடாது. யாகங்கள் கோயிலில் வெளியே நடைபெற வேண்டும், இதனை இந்து அறநிலையத்துறை ஆணையர் தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைமுறைகள் கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவராவிடில் நீதிமன்றம் கொண்டுவரும். திருப்பதி கோயிலில் உள்ளே சென்று விரதம் இருக்க முடியுமா? தமிழக கோயில்கள் மட்டும் சத்திரமா? என்று கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பின்பற்றப்படும் கட்டுப்பாடு பற்றி அறநிலையத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவில் பிரகாரத்தில் விரதம் இருக்கும் பக்தர்களை அனுமதிக்க கோரிய வழக்கில் இந்த கருத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.