முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்துசமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபுவின் அறிவுரையின்படி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், சுப்பிரமணியசாமி கோயில் நிர்வாகம் குறித்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவின்படி, திரிசுதந்திரர்களை முறைப்படுத்துதல் மற்றும் தரிசன வரிசைகளை முறைப்படுத்துதல் தொடர்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ள கடிதங்கள் வாயிலாக கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோவிலில் 26/03/2022 கூடுதல் ஆணையரால் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்) ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.
அவ்வாறு அளிக்கப்பட்ட அறிக்கை பரிசீலிக்கப்பட்டு கோவில் நலன் மற்றும் பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு முன்பே செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கோவிலில் “அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்யப்படும்” என்ற விளம்பர பலகை எல்.இ.டி. போர்டில் பக்தர்கள் எளிதில் அறியும் அடிப்படையில் வைக்கவும், கோவிலிலுள்ள திரிசுதந்திரர்களை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஐகோர்ட்டு உத்தரவு மற்றும் ஆணையர் உத்தரவை முழுமையாக செயல்படுத்த வேண்டும். மேலும் கோவிலுக்குள் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிற வரிசைமுறை நீங்கலாக தேவையில்லாத இடங்களிலுள்ள பிற எஸ்.எஸ். வரிசை முறை அமைப்புகள் அனைத்தையும் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதையடுத்து கருவறைக்கு அருகிலுள்ள மகாமண்டபத்தில் தேவையின்றியுள்ள பித்தளை வரிசை முறை அமைப்புகளையும் அகற்ற வேண்டும். பொதுதரிசனம் மற்றும் ரூபாய் 100 கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தேவர் குடிலுக்கு அருகில் மற்றும் ரூ.100 டிக்கெட் கவுண்ட்டருக்கு அருகில் மொபைல் டாய்லெட்டுகள் அமைக்க ஆகம விதிகளுக்கு உட்பட்டு சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும். அதன்பின் கோயிலில் மூலவருக்கு 3 காலங்களிலும் நடைபெறும் அபிஷேகத்தின் போது பக்தர்கள் அனுமதிச்சீட்டு பெற்று அமர்ந்து தரிசனம் செய்யவும் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்தப்பட வேண்டும்.
மற்ற கோவில்களில் இருப்பவாறு பக்தர்கள் பால் அபிஷேகம் செய்ய வேண்டுமென்றால் அதற்குரிய கட்டணத்தை நிர்ணயம் செய்து கோவில் திட்டப்படி ஒரு அபிஷேகத்திற்கு 50 லிட்டர் பசும் பாலை கோவில் வாயிலாகவே கொள்முதல் செய்து அபிஷேகம் செய்ய உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மகா மண்டபத்தில் தேங்காய் உடைக்கும் இடத்தை மாற்றி 2-ம் பிரகாரத்தில் பழைய உள்துறை அலுவலகம் அருகில் இடம் தேர்வுசெய்து தேங்காய் உடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளா வேண்டும். அதனை தொடர்ந்து கோவிலில் அன்னதானத்திற்காக தினசரி தேவைப்படும் சமையல் பொருட்களை அடுக்கி வைப்பதற்காக பலசரக்கு சாமான்கள் பாதுகாப்பு அறை உடனே அமைக்கப்பட வேண்டும்.
பக்தர்கள் உணவருந்திவிட்டு வெளியேறும் இடத்திலும் அமைக்கப்பட்டுள்ள கை கழுவுவதற்காக பயன்படுத்தப்படும் தண்ணீர் குழாய்கள் கூடுதலாக பொருத்தவும், முடிகாணிக்கை மண்டபத்தில் “முடிகாணிக்கை செய்ய கட்டணம் கிடையாது” எனும் வாசகம் பொருந்திய எல்.இ.டி. டிஜிட்டல் போர்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வைக்கப்பட வேண்டும். அத்துடன் முடிகாணிக்கையின்போது பணியாளர்கள் பக்தர்களிடம் தொகை பெறுவதை கண்காணித்து தொகை பெறும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாழிக்கிணற்றில் புனித நீராட பக்தர்களுக்கு ரூபாய் 1 கட்டணச்சீட்டு இப்போது வழங்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி கட்டணச் சீட்டை ரத்து செய்து பக்தர்களை இலவசமாக அனுமதிக்க ஆணையர் அனுமதி பெற்று செயல்பட வேண்டும். அத்துடன் பக்தர்கள் நீராடிவிட்டு விரைந்து செல்வதற்கு ஒரு பணியாளர் நியமிக்கப்பட வேண்டும். கோவிலிலுள்ள யானை இயற்கை சூழலில் நடந்து செல்வதற்கு ஏற்ப சரவணபொய்கை வளாகத்தில் மண் தரை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கோவில் இணை ஆணையர்/ செயல் அலுவலருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.