திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பட்டுக்கோட்டையார் பாடலை பாடி முதல்வர் ஸ்டாலின் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் போதை பொருள் விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை நேற்றைய தினம் இதே கலைவாணர் அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
காலையில் 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரைக்கும் நடைபெற்றது. அதில் அறிவுரைகள், ஆலோசனைகள் கருத்துக்கள், என்ன நிலைமை என்பது பற்றி எல்லாம் அலசி ஆராய்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க அதற்குரிய திட்டங்களை தீட்டி இருக்கிறோம். எனவே காவல் நிலைய எல்லையில் போதை மற்றும் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்து விட்டோம் என்று ஒவ்வொரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் உறுதி எடுத்துக் கொண்டால் நிச்சயம் போதை நடமாட முடியாது என்று நான் சுட்டிக்காட்டி பேசி இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கஞ்சா விளைவிப்பதை முற்றிலுமாக தடுத்தாக வேண்டும். மலையடிவாரங்களை கண்காணிக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதை தடுத்தாக வேண்டும். எல்லை மாவட்டங்களில் சோதனை சாவடிகளை அதிகப்படுத்த வேண்டும். கடலோர மாவட்டங்களில் நிச்சயமாக கண்காணிப்பு அதிகப்படுத்த வேண்டும் காவல் துறையினர் ரோந்தினை அதிகரிக்க வேண்டும்.அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். போதை பொருள் விற்பனையாககூடிய, அதிக விற்பனையாக கூடிய இடங்களை எல்லாம் நிரந்தரமாக கண்காணிக்க வேண்டும்.
பள்ளி, கல்வி இந்த நிறுவனங்களுக்கு அருகில் விற்கப்படுவது தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தி இருக்கிறேன். அரசு இது தொடர்பான சட்டங்களை கடுமையாக்க முடிவு செய்துள்ளது. சட்டங்களை திருத்துவதற்கும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க இருக்கிறோம். போதை மருந்து விற்பவர்களுடைய சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்யப்பட இருக்கிறது இதற்காக சைபர் செல் உருவாக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு என்று தனியாக ஒரு இன்டெலிஜென்ட் செல் (நுண்ணறிவு தடுப்பு பிரிவு ) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உறுதியை மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் ஏற்றுக் கொள்ள இருக்கிறார்கள். இவை அனைத்தும் அரசாங்கத்துடைய கடமை.. இந்த நடவடிக்கைகளில் நான் சர்வாதிகாரை போல் செயல்பட்டு குற்றம் நடைபெறாமல் தடுப்பேன் என்றும், அதிகாரிகள் கூட்டத்தில் உறுதி அளித்துள்ளேன்.
இவற்றை நாங்களும், அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் பார்த்துக் கொள்வோம் சட்டம் தன் கடமையை செய்யும் சட்டம், அதன் கடமையை உறுதியாக செய்யும். அப்படி அந்த கடமையை செய்ய தவறும் அதிகாரிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக கடுமையாக கூற விரும்புகிறேன் . இப்போது திமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது. குற்றங்கள் குறைந்துள்ளன.. குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்படுகிறார்கள்.. அவர்களுக்கு முறையாக தண்டனையும் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அதிலும் குறிப்பாக போதை மருந்து விற்பனை செய்யக்கூடிய குற்றங்களில் ஈடுபடுபவர்களை தனிப்பட்ட குற்றவாளிகளாக கருத முடியாது. இந்த சமுதாயத்தையே கெடுக்கிற குற்றவாளிகள். சமூகத்தில் தீராத பெரும் நோயை பரப்பக்கூடிய குற்றவாளிகளாக இவர்கள் இருக்கிற காரணத்தினால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு எந்தவித தயக்கமும் காட்டாது. திமுக ஆட்சி அமைந்தது முதல் 41,625 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் போதை நடமாட்டம் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க முடியலை.
அதை (போதைப்பொருள்) எப்படியாவது பெற்று விடுகிறார்கள்.. அவர்கள் கைக்கு எப்படியோ போய் சேர்ந்து விடுகிறது. இந்த சங்கிலியை உடைத்தாக வேண்டும். போதை பொருளானது ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு போய் சேர வேண்டிய அந்த சங்கிலியை நாம் உடைத்தாக வேண்டும்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் திருடாதே என்ற திரைப்படத்தில் பாட்டு எழுதினார். ரொம்ப ஃபேமஸான பாட்டு அது… திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கிறது. அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்கிறது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று எழுதினார் பட்டுக்கோட்டையார்..
எந்த குற்றமாக இருந்தாலும் அதை சட்டத்தில் சட்டத்தின் உடைய பங்கு பாதி தான். குற்றவாளிகள் மனமாற்றம் ஆனது பாதியளவு இருக்கணும்.. அதிலும் போதை பொருள் பயன்பாடு என்பது அதனை பயன்படுத்துவர்களின் விருப்பமாக, இன்னும் சொன்னால் அவர்கள் அதில் அதிகப்படியாக அடிமையாகி விடுகிறார்கள். மீள முடியாத அளவுக்கு சிலர் போய் விடுகிறார்கள்.. இவர்களை திருத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.. சாதாரண நோயாக இருந்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற அவருடைய பெற்றோர் உறவினர்கள் போதும்.. ஆனால் போதை போன்ற சமூக நோயாக இருக்குமானால் அதில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற ஒட்டுமொத்த சமூகமே முயற்சி எடுத்தாக வேண்டும்”. என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.