Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என சம்பந்தரும், தன் பொருநை புனல்நாடு என சேக்கிழாரும், பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை திரு நதி என கம்பரும் பாடிய ஊர்தான் திருநெல்வேலி. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி அல்வாவும் புகழ்பெற்றவை. திருநெல்வேலி தொகுதியில் 1952 முதல் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 3 முறை வென்றுள்ளது.

தற்போதய  எம்.எல்.ஏ.  திமுகவின் லக்ஷ்மணன். திருநெல்வேலி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,91,156 ஆகும். தாமிரபரணியில் குளிப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படும் என்ற அளவிற்கு நதி மாசுபட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குடிநீருக்காக பயன்படுத்தும் போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக அவர்கள் சாடுகின்றனர். பாதாள சாக்கடை கழிவுநீர் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலப்பதே இதற்கு காரணம் என்பது புகார்.

தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை. ராமையன்பட்டி குடியிருப்பு பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி குப்பைகள் கொட்டப்படுவது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கங்கைகொண்டன் சிப்காட் தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் கொண்டு வர வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கை. சந்திப்பு ரயில் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை தேவை என்பது நீண்டகால கோரிக்கை.

நெல்லையப்பர் கோவில் ரதவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பு. ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு அளித்த பேட்டை கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. நீண்ட காலமாக வாக்குறுதிகளாகவே நீடிக்கும் திட்டங்கள், நிறைவேறாத கோரிக்கைகள்யாவும் வரும் நாட்களிலாவது தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் தேர்தலுக்காக நெல்லை மக்கள் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |