திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசனத்திற்கு கூடுதல் டோக்கன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் அதிகாரி கூறியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த வாரம் முதல் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக நாளொன்றுக்கு 3 ஆயிரம் டாப் தங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால், இலவச டோக்கன் பெறுவதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. டோக்கன்கள் வழங்கிக் கொண்டிருந்த போது அதனைப் பெறுவதற்கு வரிசையில் நின்ற பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் டோக்கன்கள் பெறாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுபற்றி அறிந்த உடன் கோவில் கூடுதல் அதிகாரி தர்மா ரெட்டி அங்கு விரைந்து சென்றார். அப்போது பக்தர்களிடம் பேசிய அவர், ” தினந்தோறும் 3000 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மேலும் கூடுதலாக 2 ஆயிரம் டோக்கன்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தை தவிர்க்கக் கூடிய வகையில் இலவச தரிசன டோக்கன் ஆன்லைன் மூலமாக வழங்குவதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. சித்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இலவச தரிசனத்தை ரத்து செய்வது பற்றிய ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.