திருப்பதி கோவிலில் மாற்றுத்திறனாளிகளும், மூத்த குடிமக்களும் சிறப்பு தரிசனம் செய்வதற்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு முன்புவரை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்வதற்கான சிறப்பு நுழைவு வாயில் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக இந்த தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இப்போது நாடு முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. அதன்பின் பக்தர்களின் எண்ணிக்கையை தேவஸ்தானம் அதிகரித்துள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்கான சிறப்பு நுழைவு தரிசனத்தில் அனுமதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்து இருக்கிறது.
அதன்படி திங்கள்-வியாழக்கிழமை வரையும், சனிக்கிழமையும் காலை 10 மணிக்கு கோவிலுக்கு தெற்குமாட வீதியிலுள்ள சிறப்பு வரிசையில் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையில் வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட இருக்கின்றனர். நாள்தோறும் ஆயிரம் பக்தர்கள் என்று இந்த சிறப்பு தரிசனத்தில் அனுமதிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.