திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இரவு 7 மணி அளவில் கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லேப்பாட்சி வணிக வளாகம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆனது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருமலை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் யாரும் எதிர்பார்க்காத வகையில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றது. மேலும் கொரோனா தொற்றால் இரண்டு வருடங்களாக திருமலைக்கு பக்தர்கள் யாரும் வர முடியவில்லை. கோவிலில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பொறுமையாக இருந்து தரிசனம் செய்ய வேண்டும். மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதனால் பொறுமையை கடைபிடித்து சாமி தரிசனம் ஏற்பாடுகளை செய்துகொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.