திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், முதற்கட்டமாக இலவச தரிசனம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகேயுள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் போன்ற 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. தினசரி 10,000 தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே பக்தர்கள் ஆதார்கார்டு (அல்லது) ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
அதுமட்டுமல்லால் ரூபாய் 300 விரைவு தரிசன டிக்கெட் ஆன்லைன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன் வகையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இனையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன் ஜூன் மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் முன்னுரிமை அடிப்படையில் டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஸ்ரீவாரி சேவை கல்யாணோத்ஸவம், ஆர்ஜித பிரம்மோத்ஸவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபாலனகர சேவை போன்றவைக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது.
எனவே இதில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் ஆன்லைன் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு உரியதகவல் அவர்களுடைய மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இப்போது ஆன்லைனில் டிக்கெட்டுகள் நாளொன்றுக்கு 1,000 டோக்கன்கள் வீதம் வெளியிடப்படும் சூழ்நிலையில், அவற்றை பெற்ற பக்தர்கள் தினசரி காலை 10 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணி முதல் ஏழுமலையானை வழிபட அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.