திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் பேருந்தில் பயணச்சீட்டு எடுக்கும்போதே 300 ரூபாய் தரிசன பயணச்சீட்டை எடுத்துக்கொள்ளும் வசதியை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னர், மறுபடியும் திறக்கப்பட்ட திருப்பதி கோவிலில், பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட்டுகள் மற்றும் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலையில், தற்போது ஆந்திர அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பேருந்து டிக்கெட்களுடன் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கும் வசதியை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் முதல்கட்டமாக ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களிலிருந்து புறப்படும் ஆந்திர அரசு பேருந்துகளில் 300 ரூபாய் தரிசன பயணச்சீட்டு வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.