திருப்பதியில் போலி தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்த விவகாரம் தேவஸ்தான அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்து வாங்கிக் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருப்பதியில் கடந்த சில மாதங்களாக இடைத்தரகர்கள் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதும் அதனால் சில பிரச்சனைகளையும் நிர்வாகம் சந்தித்து வருகிறது. மேலும் பக்தர்களிடம் எவ்வளவோ கூறியும் இடைத்தரகர்கள் செயல்பட்டு வருவது ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானாவில் இருந்து வந்த மூன்று பக்தர்களின் டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவை போலி டிக்கெட்டுகள் என கண்டறியப்பட்டது.
இதேபோல் பெங்களூருவில் இருந்து வந்த பக்தர்கள் சிலரும் போலி டிக்கெட்டுகள் கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. இவ்வாறாக போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்து சுமார் 27 ஆயிரம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். அதாவது 300 ரூபாய் மதிப்புள்ள ஒவ்வொரு போலி டிக்கெட்டையும் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இதுதொடர்பாக விஜிலென்ஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அதில் திருப்பதியை சேர்ந்த சிறப்பு அதிரடிப்படை காவலர் கிருஷ்ணாராவ், திருப்பதி லட்டு கவுண்ட்டர் ஒப்பந்த ஊழியர் அருண், இடைத்தரகர்கள் பாலாஜி,செங்காரெட்டி, முன்னாள் டிக்கெட் கவுண்டர் ஏஜென்சி ஊழியர் நாகேந்திரா, தேவேந்திர பிரசாத், வெங்கட் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் 7 பேரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.