திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வாரநாட்களில் நாள்தோறும் 30 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக பத்தாயிரம் டிக்கெட்டுகளும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்துக்கு பிறகு திருமலையில் தற்போது பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் என நான்கு நாட்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் மொத்தமாக சனிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டு டிக்கெட் கவுண்டர்கள் மூடப்படுகின்றன.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து நடைப் பயணமாகவும், வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில் இலவச தரிசன டிக்கெட் பெற முயன்றவர்கள் டிக்கெட் கவுண்டர்கள் மூடி உள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் செவ்வாய்க்கிழமை வரையிலான தரிசன டிக்கெட்டை ஏற்கனவே விநியோகம் பட்டு விட்டதாகவும் இனி புதன்கிழமை டிக்கெட்டுகள் கிடைக்கும் என்பதையும் அறிந்து அவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். தரிசன டிக்கெட் கிடைக்காத விரக்தி அடைந்த பக்தர்கள் அலிபிரி சோதனைச்சாவடி அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு சில பக்தர்கள் சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து அங்கு வந்த தேவஸ்தான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பக்தர்கள் சமாதானம் அடைந்துள்ளனர். அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசபுரம் கோதண்டராமர் கோயில் சத்திரம் ஆகிய 3 இடங்களில் ஏழுமலையான் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.