59 லட்ச ரூபாய் பணத்தை கையாடல் செய்த விவகாரத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாமியார் புதூரில் செல்வ பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷுக்கு திருமணம் நடைபெற்றது. இதனால் திருமண வேலைகளை கவனிப்பதற்காக 4 மாதங்கள் ஊழியர்களிடம் நிதி நிறுவன நிர்வாகத்தை பிரகாஷ் ஒப்படைத்தார். இதனை அடுத்து செல்வ பிரகாஷ் கொடுக்கல்- வாங்கல் கணக்குகளை சரிபார்த்த போது பல்வேறு நபர்களுக்கு 59 லட்சம் ரூபாய் கொடுத்ததாக ஆவணங்களில் எழுதப்பட்டிருந்தது.
இதனை அடுத்து ஆவணங்களில் இருந்த முகவரிக்கு சென்று பிரகாஷ் விசாரித்த போது போலியான கணக்கு எழுதப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே 5 ஊழியர்கள் வேலையை விட்டு நின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த 5 பேர் இணைந்து பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. அதனை அடுத்து ரகுநாதன், ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மற்ற மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.