தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் சமையல் ஆர்டரை சேலம் ஆர்ஆர் பிரியாணி நிறுவனம் எடுத்துள்ளது. இந்த விழாவில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி செய்வதற்காக 3600 கிலோ இறைச்சியை சோமேட்டோ ஆன்லைன் நிறுவனம் உணவு விற்பனை மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சோமேட்டா நிறுவனம் கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியிலிருந்து இறைச்சியை வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதனை ஃப்ரீசர் வசதி கொண்ட லாரியில் இறைச்சி பண்டல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை எடுத்து சமைத்த ஆர்ஆர் பிரியாணி உணவக ஊழியர்கள் இறைச்சி கெட்டுப் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆர்ஆர் பிரியாணி உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு மீதம் இருந்த இறைச்சிகளை கொண்டு வந்து சென்னை கிண்டியில் உள்ள ஆர்ஆர் பிரியாணி உணவகம் கிடங்கில் வைத்துள்ளனர்.
இதையடுத்து உணவு பாதுகாப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் கிடங்கிற்கு வந்த அதிகாரிகள் இறைச்சியை பரிசோதனை செய்தனர். அப்போது இறைச்சி கெட்டுப் போனது என்று தெரிய வந்தது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கூறியது, ” குடோனில் இருந்த இறைச்சிகளை நாங்கள் சோதனை செய்து பார்த்தோம். அவை கெட்டுப் போயுள்ளது. ஃப்ரீசர் வாகனத்தில் இறைச்சி வந்ததாக கூறுகின்றனர். ஆனால் இவை ஏறக்குறைய அழுகிய நிலையில் உள்ளது. இவ்வாறு கெட்டுப்போன இறைச்சியை தான் சோமேட்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது என்று நினைக்கிறோம். மேலும் ஆய்வு செய்த இறைச்சிகளை சோதனைக் கூடம் மற்றும் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்ப உள்ளோம். இந்த சம்பவத்திற்கு சோமேட்டோ பதில் சொல்ல வேண்டும் என்றும் கர்நாடக மாநிலத்துக்கு சென்று விசாரணை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.