வாலிபர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புங்கரை கிராமத்தில் பிரதீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரதீப்பிற்கும் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு பிரதீப் வீட்டிலிருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரதீப்பை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் பிரதீப் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரதீப் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது இறப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.