மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுமியின் உடலிலும் அரளி விதை விஷம் கலந்திருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய கவுண்டாபுரம் பூமரத்து காட்டு பகுதியில் கூலி தொழிலாளியான அறிவழகன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சியாமளா(36) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீதேவி(17), கோமதி(15) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்த ஸ்ரீதேவியை அதே பகுதியில் வசிக்கும் சம்பத் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் சம்பத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் ஸ்ரீதேவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளனர். தனக்கு திருமணம் செய்ய விருப்பம் இல்லை என ஸ்ரீதேவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சியாமளா நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை அறிவழகனும், கோமதியும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மறுநாள் அதிகாலை வீட்டிற்கு திரும்பிய அறிவழகன் தனது மகள் ஸ்ரீதேவி இறந்து கிடப்பதை பார்த்த அதிர்ச்சியடைந்து போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமியின் உடலிலும் அரளி விதை விஷம் கலந்திருப்பது உறுதியானது. எனவே தன்னால் தான் தாயார் அரளி விதையை அரைத்து குடித்தார் என்ற பயத்தில் சிறுமி தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது யாரேனும் கட்டாயப்படுத்தி அரளி விதையை குடிக்க வைத்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையின் முழு விவரம் கிடைத்தால் தான் சாவில் இருக்கும் மர்மங்கள் விலகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.