கறம்பக்குடி அருகில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகில் கண்ணு தோப்பு கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவருடைய மனைவி 26 வயதுடைய அழகுராணி. இவர்களுக்கு கல்யாணமாகி 4 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் யுவிதா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் அழகுராணி நேற்று முன்தினம் இரவு மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ரெகுநாதபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அழகுராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அழகு ராணியின் தாய் பரமேஸ்வரி ரெகுநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மேலும் அழகுராணிக்கு கல்யாணமாகி 4 வருடங்களே ஆவதால் புதுக்கோட்டை உதவி கலெக்டர் கருணாகரன் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.