இந்தியாவில் பல பகுதிகளில் வரதட்சணை கொடுமைகளால் இளம்பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதேபோல் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் வரதட்சணை கொடுமை தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரம் ரங்கநாதன் தெருவை சேர்ந்த சினேகா என்பவருக்கும், பனையூரை சேர்ந்த பிரமோத் என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்கள் இருவரும் முதலில் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்கு சினேகா வீட்டில் 15 சவரன் நகை, சீர்வரிசை கொடுத்துள்ளனர். ஆனால் ஆரம்பம் முதலே மாப்பிள்ளை வீட்டார் அதிக வரதட்சணை வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதையடுத்து திருமணமான பிறகு அந்தப் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் பெண்ணிற்கு சமையல் செய்யத் தெரியவில்லை என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வந்துள்ளனர். சமீபத்தில் பிரமோத் சினேகாவுடன் சண்டையிட்டு அவரை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார்.
இதனால் கோபமடைந்த சினேகா கடந்த மாதம் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு பெற்றோர்கள் சினேகாவிற்கு சிகிச்சை அளித்தனர். அதன்பிறகும் பிரமோத் சினேகாவுடன் தொடர்ந்து செல்போனில் பேசி அவரிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சினேகா இரவு அழுதுகொண்டே உறங்கச் சென்றுள்ளார். காலை விடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்துள்ளார். பின்னர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சினேகாவின் தந்தை ரவி காவல் நிலையத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக புகார் கொடுத்துள்ளார். திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகியுள்ளதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. தற்கொலை சம்பவம் குறித்து கணவர் பிரமோத் மற்றும் மாமியார், மாமனாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.