வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய போலீஸ் உள்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடேந்திரபுரம் பகுதியில் ராஜசிம்மன் என்கின்ற நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி பட்டாலியன் படைப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் செல்வபிரியா என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கணவரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு தினமும் கொடுமைபடுத்துவதாக செல்வபிரியா தேனி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் காவல்துறையினர் செல்வபிரியா கொடுத்த புகாரை வழக்குபதிவு செய்யாமல் இருந்துள்ளனர். இதனையறிந்த செல்வபிரியா மற்றும் அவரது குடும்பத்தினர் 2 தினங்களுக்கு முன்பு தேனி மகளிர் காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற துணை சூப்பிரண்டு அதிகாரி பால்சுதிர் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்படி செல்வபிரியாவின் கணவர் ராஜசிம்மன் என்ற நவீன்குமார், மாமனார் ஈஸ்வரன், மாமியார் கொடியரசி உள்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.