திருமணமான ஒரு மாதத்தில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கேஸ் ஏஜென்சியில் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி ஜெய்சங்கருக்கும் தாய் மாமன் மகளான சாமுண்டீஸ்வரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினர் தேனிலவுக்காக குடும்பத்துடன் ஊட்டி, கொடைக்கானலுக்கு சென்று விட்டு கடந்த 14-ஆம் தேதி வீட்டிற்கு வந்தனர். அதற்கு மறுநாள் சாமுண்டீஸ்வரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புதுப்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தின் கீழ் விஷம் குடித்து மயங்கி கிடந்த ஜெய்சங்கரை அக்கம் பக்கத்தினர் மீது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெய்சங்கர் பரிதாபமாக இறந்து விட்டார். மனைவி தற்கொலை செய்து ஐந்தாவது நாளில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.