திருமணமான காதல் ஜோடிகளை அரிவாளால் தாக்கிய பெண்ணின் உறவினர் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் விக்டோரியா நகரில் வினித் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பில்கேஷி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 21ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்குப்பின்பு பாதுகாப்பு கேட்டு ராமநாதபுரம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனைதொடர்ந்து வினித் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பில்கேஷி வீட்டார் திருமணத்தில் உடன்பாடு இல்லை என கூறி திருமண ஜோடிகளுக்கு எவ்வித பிரச்சனையும் செய்யமாட்டோம் என எழுதி கொடுத்துள்ளனர். இதனைதொடர்ந்து வினித் மற்றும் பில்கேஷி அவர்களது உறவினர்களுடன் தங்கச்சிமடத்திற்கு புறப்பட்டுள்ளனர். அப்போது ராமநாதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பில்கேஷி உறவினர்கள் 4 பேர் காத்திருந்துள்ளனர். மேலும் வினித், பில்கேஷி, ஜான்ஸ்டீன், குளோரி ஆகியோர் பேர் பேருந்தில் ஏறியவுடன் காரில் காத்திருந்த 4 பேர் அரிவாளுடன் சென்று காதல் ஜோடிகளை வெட்டியுள்ளனர்.
இதனை தடுக்க முயன்ற ஜான்ஸ்டீன், குளோரி ஆகியோரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்கள் அந்த 4 பேரையும் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து மண்டபம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பெண்ணின் உறவினர்களான தங்கச்சிமடத்தை சேர்ந்த சுரேஷ், சூசல், யாகப்பா, ரஸ்புதின் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.