கேரள மாநிலம் ஆலப்புழா காயங்குளம் பகுதியை சேர்ந்த அஸ்கருதீன் ரஷீத்துக்கும் (30), அடூர் அருகேயுள்ள பழக்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 30ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவருக்கும் அன்று இரவு முதலிரவு நடந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு 3 மணி அளவில் அஸ்கருதீன் தனது நண்பர் ஒருவர் விபத்தில் சிக்கியதாகவும், அவருக்கு ரத்தம் கொடுப்பதற்காக தான் செல்ல வேண்டும் என்றும் பெண்ணிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அதன்பின் காலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பெண் வீட்டார் நடத்திய சோதனையில், அஸ்கருதீன் தனது மனைவியின் 25 பவுன் நகை மற்றும் அவருக்கு வரதட்சணையாக கிடைத்த 2 லட்ச ரொக்கம் போன்றவற்றுடன் தலைமறைவானது தெரியவந்தது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அஸ்கருதீன் ரஷீத்துக்கும், ஆலப்புழாவில் சேப்பாடு என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இருந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து சேப்பாடு விரைந்த காவல்துறையினர் அங்கு தலைமறைவாக இருந்த அஸ்கருதீன் ரஷீதை கைது செய்தனர்.