தனியார் நிறுவன அதிகாரியை காரில் கடத்தி சென்று கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் சோனைமுத்து(37) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே இருக்கும் தனியார் வங்கியில் சோனைமுத்து கடன் பிரிவு மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அதே வங்கியில் வேலை பார்த்த பெண்ணுடன் சோனைமுத்து நட்பாக பழகி வந்துள்ளார். அந்தப் பெண் சுகுணாபுரத்தை சேர்ந்த சல்மான் பாரிஸ்(23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சோனைமுத்து அந்த பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது சல்மானுக்கு தெரிந்தது.
இதனால் கோபமடைந்த சல்மான் சோனைமுத்துவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களிடம் பேச வேண்டும் வ.உ.சி பூங்காவுக்கு வாருங்கள் என அழைத்துள்ளார். இதனால் சோனைமுத்து அங்கு சென்றுள்ளார். அப்போது சல்மான் தனது நண்பர்களான அக்பர் சாதிக், முகமது அஸ்கர் ஆகியோருடன் இணைந்து சோனைமுத்துவை கண்டித்த போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சல்மான் கத்தியை காட்டி சோனைமுத்துவை தனது நண்பர்களுடன் காரில் கடத்தி சென்று தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் குத்தியுள்ளார்.
இதனை அடுத்து ஆத்துப்பாலம் சிக்னல் அருகே பெட்ரோல் இல்லாமல் கார் நின்றதால் படுகாயமடைந்த சோனைமுத்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டபடி காரில் இருந்து கீழே இறங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சோனைமுத்துவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய சல்மான் பாரிஸ், அவரது இரண்டு நண்பர்களை அதிரடியாக கைது செய்தனர்.