திருமணமான இளம்பெண் ஒருவர் மீது ஒருதலை காதலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் சலோமி. 21 வயதான இவருக்கு திருமணமாகிவிட்டது. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூட பாராமல் பேருந்து நடத்துனரான சுந்தரமூர்த்தி என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது விருப்பத்தை சுந்தரமூர்த்தி அப்பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் அதனை சலோமி மறுத்துவிட, உடனே தான் கொண்டுவந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி சுந்தரமூர்த்தி தீ வைத்துள்ளார்.
இதில் அவர் அலறி துடித்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து, அவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் பலத்த தீக்காயமடைந்த சலோமி ஆபத்தான நிலையில் குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பேருந்து நடத்துனர் சுந்தரமூர்த்தி ஓட முயன்ற போது பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.