கடன் தொல்லையால் வெல்லம் ஆலை அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பாண்டமங்கலத்தை அடுத்துள்ள நெட்டையம்பாளையம் பகுதியில் சதீஷ் (வயது 31) என்பவர் வசித்து வந்துள்ளார். வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வரும் இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கீர்த்தனா (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சம்பவத்தன்று வெளியே சென்ற சதீஷ் நீண்டநேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்கு அருகே இருந்த தோட்டத்தில் சதீஷ் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக சதீஷை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சதீஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் கடன் தொல்லை காரணமாக சதீஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.