தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைகுளம் அனந்தமாடன் கச்சேரி காலனி தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தங்க முடியை சாமி அப்பகுதியில் இருக்கும் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தங்க முனியசாமி சீதாலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஒரு கயிற்றின் ஒரு முனையில் தங்க முனியசாமியும், மற்றொரு முனையில் சிதாலட்சுமியும் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து போலீசார் கணவன் மனைவியின் உடல்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் காதல் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.