இந்து மக்கள் கட்சியினர் தாலிக்கயிறுடன் கோவிலுக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் ராவ் தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் தாலிக்கயிறுடன் கோயிலுக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையில் போலீசார் கோவிலின் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை தீவிர விசாரணை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுப்பிவைத்துள்ளனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள், குடும்பத்துடன் வருபவர்கள் மற்றும் தனியாக வந்தவர்களுக்கு மட்டுமே கோவிலுக்குள் அனுமதி வழங்கப்பட்டது. காதல் ஜோடிகளுக்கு கோவிலுக்குள் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் காதல் ஜோடிகள் காவல்துறையினருக்கு தெரியாமல் கோவிலின் பின்பக்கம் வழியாக சென்றுள்ளனர். மேலும் அங்கு வந்த இந்து மக்கள் கட்சியினருடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.