திருத்துறைப்பூண்டி அருகே காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் போராட்டம் நடத்தி காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அண்ணா நகரில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 20 வயதுடைய ராம் பிரியா என்ற மகள் இருக்கிறார். அவர்களின் பக்கத்து வீட்டில் தங்கராஜ் மகன் விக்னேஷ் (29) என்பவர் இருக்கிறார். பவர் இன்ஜினியரிங் படித்துவிட்டு பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராம் பிரியா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். அவர்களின் காதலுக்கு விக்னேஷ் வீட்டில் மறுப்பு தெரிவித்தனர். அதனால் ராம் பிரியா தனது தந்தையிடம் தனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்குமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து வேதாரண்யம் அருகே இருக்கின்ற பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கும் ராம் பிரியாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அவர்கள் இருவருக்கும் வருகின்ற 25 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விக்னேஷ், ராம் பிரியா வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி, தன்னை விட்டு வேறு வாலிபரை திருமணம் செய்து கொண்டால் நாம் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை உனது வருங்கால கணவரிடம் காட்டி விடுவேன் என்று சொல்லி அவரை மிரட்டியுள்ளார்.
அதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ராம் பிரியா, விக்னேஷ் வீட்டிற்கு சென்றார். ஆனால் விக்னேஷ் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வேறு ஒரு ஊருக்குச் சென்று விட்டனர். இதைப் பற்றி ராம் பிரியா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து விக்னேஷ் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது விக்னேஷ் தன்னை திருமணம் செய்யும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று கூறி அங்கேயே அமர்ந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தொலைபேசி மூலமாக விக்னேஷ் போனுக்கு தொடர்பு கொண்டு மகளிர் போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அங்கு பேச்சுவார்த்தை நடத்தி ராம் பிரியாவை திருமணம் செய்து கொள்வதற்கு விக்னேஷ் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கோவிலில் வைத்து போலீசார் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.