சுத்தியலால் அடித்து இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டியில் பேச்சி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டி என்ற மகன் உள்ளார். இவர் 100 நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டிக்கும், பிரியா என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். பிரியாவின் தாய், தந்தை இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதால் அவர் தனது சித்தி பாதுகாப்பில் வளர்ந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியாவின் சித்தி சரஸ்வதி மும்பைக்கு சென்றதால் பிரியாவை உசிலம்பட்டியில் இருக்கும் பாட்டியான கிளி என்பவரது பராமரிப்பில் விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று பிரியாவின் பாட்டி கிளி வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார்.
இதனால் வீட்டில் பிரியாவும், பாண்டியும் தனியாக இருந்துள்ளனர். அப்போது திடீரென அலறல் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்துள்ளனர். அங்கு சுத்தியலால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிரியா சடலமாக கிடந்ததை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.