புதுப்பெண் அளித்த வரதட்சணை புகாரின் பேரில் கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள மலைப்பட்டி தெற்கு தெருவில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி செல்வகுமாருக்கும், அவரது காதலியான தமிழரசி(27) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது பெண்ணின் குடும்பத்தினர் 10 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் செல்வகுமாருக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து சிலரின் தூண்டுதலின்படி செல்வகுமார் கூடுதல் வரதட்சணை கேட்டு தமிழரசியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனை வெளியே சொன்னால் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழரசி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் செல்வகுமார் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.