கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னபேட்டை கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மின்னல்கன்னி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுபாஷ் சந்திரபோஸ் என்ற மகனும், அனிதா என்ற மருமகளும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று மின்னல்கன்னி மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் திருமண அழைப்பிதழ் கொடுப்பதாக கூறி மின்னல்கன்னியின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என அவர் கேட்டதால் மின்னல்கன்னி சமையலறைக்கு தண்ணீர் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த வாலிபர் படுக்கையறைக்குள் நுழைந்து அனிதாவின் கைப்பையில் இருந்த பொருட்களை திருட முயற்சி செய்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மின்னல்கன்னி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தப்பியோடிய வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமரன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.