மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென் சிறுவள்ளூர் கிராமத்தில் அசோக்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் மேலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவருடன் அதே கிராமத்தில் வசிக்கும் ஆர்த்திபன்(21), அரியேந்திரன்(23) ஆகியோரும் வந்தனர். இந்நிலையில் பெரியசிறுவத்தூர் சாலையில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து அசோக்கின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அசோக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தஆர்த்திபன், அரியேந்திரன் ஆகிய இருவரையும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.