கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சேர்ந்த அருண், டேனியல், மோகன் ஆகிய 3 நண்பர்களும் தஞ்சாவூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு காரில் புறப்பட்டனர். இந்த காரை மோகன் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை ரோட்டில் இருந்து புதுக்கோட்டை சாலையை கடந்து தஞ்சாவூர் சாலையில் சேரும் ரிங் ரோட்டில் கார் சென்றுள்ளது. அப்போது திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 50 பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கிவிட்டது. இதனையடுத்து படுகாயமடைந்த நண்பர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்து லேசான காயமடைந்த 3 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.