நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி டவுன் சிவா தெருவில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கணபதி விஜய் தொழிலதிபராக இருக்கிறார். நேற்று கோவில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜய் காரில் சென்றுள்ளார். இதனையடுத்து விஜய் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காரில் மீண்டும் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மதுரை- நெல்லை நான்கு வழி சாலையில் இருந்து குறிச்சிகுளம் வழியாக நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தபோது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது.
இதனை பார்த்த விஜய் உடனடியாக காரை நிறுத்தி மற்றவர்களுடன் கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.