கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமண வரன்கள் தடுப்பவர்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது மிகவும் வைரலாகி வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் குளச்சல் சுற்றுவட்டார பகுதியில் இளைஞர்களுக்கு பெண் பார்க்க பெண் வீட்டார் விசாரிக்க வரும் போது சிலர் தவறான விஷயங்களை கூறி வரன்களை தடுத்து விடுவதாக தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்கதையாகி வருவதால் இளைஞர்கள் தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் விதமாக வரங்களை தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி எனக்கூறி பேனர் மற்றும் போஸ்டர் ஒட்டி உள்ளது பெரும் வைரலாகி உள்ளது.
கருங்கல் பகுதியில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் “திருமண வரன்கள் தடை செய்பவர்கள் கவனத்திற்கு தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தால் மட்டும் தடை செய்யட்டும். சில நபர்களின் அடையாளம் தெரியும். அடுத்த போஸ்டலில் அவர்களின் புகைப்படம் இடம்பெறும்” என குறிப்பிட்டுள்ளனர். தற்போது இந்த போஸ்டர் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இளைஞர்கள் தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் வகையில் போஸ்டர் அடித்து புரம் பேசி வரன்களை கெடுக்கும் ஆசாமிகளுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பாக இதை ஒட்டியுள்ளனர்.