திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவின் பணிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைவதை ஒட்டி, நேற்று அறங்காவலர் குழுவின் இறுதி குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி மற்றும் செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆகியோர் கூறியது, திருமலையின் சுற்றுச் சூழலை பாதுகாத்து மாசை குறைக்க தேவஸ்தானம் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தது. தற்போது ஓராண்டு காலம் திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டதால், திருமலை பசுமை மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.ஜம்முவில் ஏழுமலையான் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 18 மாதங்களில் அப்பணிகள் நிறைவு பெற்று, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
மேலும் வாரணாசி, மும்பையிலும் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. திருமலையில், அனுமன் பிறப்பிடமாக தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக பல பண்டிதர்களின் வழிகாட்டுதலுடன் அஞ்சனாத்திரியை அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க யாரும் முயற்சிக்க வேண்டாம். இது குறித்து விவாதிக்கவும் வேண்டாம் என்று அவர் கூறினார்.