திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டு போலவே கொரோணா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலின் உற்சவ நிகழ்ச்சிகளை காண பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து கிரிவலம் செல்ல திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரம் பக்தர்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் பேர் என 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மலையின் மீது ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.