பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவில் அமைந்துள்ள ஒரு பாறையில் 133 அடிஉயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டுள்ளது. இந்த சிலையானது உப்பு காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 4 வருடங்களுக்கு ஒரு முறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம் ஆகும். சென்ற 2017 ஆம் வருடம் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசப்பட்டது. இதையடுத்து கடந்த வருடத்தில் ரசாயன கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அந்த பணி நடைபெறவில்லை.
இந்நிலையில் பல துறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் திருவள்ளுவர் சிலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ரூபாய்.1 கோடி திட்ட மதிப்பில் ரசாயன கலவை பூசும் பணிக்காக டெண்டர் விடப்பட்டது. அதனை தொடர்ந்து இதற்குரிய பணியை துவங்குவதற்காக சென்ற 6ஆம் தேதி திருவள்ளுவர் சிலையை சுற்றி சாரம் அமைக்கப்பட்டது. இப்பணி முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இன்னும் ஓரிரு தினங்களில் சாரம் அமைக்கும் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாரம் முழுமையாக அமைக்கப்பட்டதும் ரசாயன கலவை பூசும் பணி நடைபெறும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.