Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருவாடானை சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் என்ன ?

வறட்சியான ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யப்படும் பகுதியாக திருவாடானை உள்ளது. இதை அடுத்து மீன்பிடித்தொழில் பிரதானமாக உள்ளது. தேவிபட்டினம் கடலுக்குள் அமைந்துள்ள நவபாசன கோவில், தொண்டி அருகே உள்ள பாகம் பிரியாள் கோவில், பாசிப்பட்டிணம் தர்கா, ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயம் ஆகியவை புகழ்பெற்ற தலமாக உள்ளது.
திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் இருமுறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளன. சுதந்திர கட்சியும், சுயேச்சை வேட்பாளர்களும் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளன. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தற்போதைய எம்எல்ஏவாக உள்ளார். திருவாடனை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,84,417 ஆகும்.
திருவாடானை பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை. குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். தொண்டி பகுதியில் துறைமுகம், அரசு மருத்துவ கல்லூரி ஆகியவை அமைக்க வேண்டும் என்பதும், சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கைகள் ஆகும்.
புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களை இணைத்து சுற்றுலாத்தலமாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. சட்டமன்றத் தொகுதி ஆகவும், தாலுகா தலைமையிடமாகவும் உள்ள திருவாடனை ஊராட்சியில் இருந்து பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். வறட்சிக் காலங்களில் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக உள்ளதால் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான சேவை மையம் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Categories

Tech |