மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூரில் உள்ள பரிமள ரங்கநாதர் கோவிலில் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிழந்தூரில் சிறப்பு வாய்ந்த பரிமள ரெங்கநாதர் கோவில் உள்ளது. இது பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோவில்களில் ஐந்தாவது கோவிலாக விளங்குகிறது. மேலும் 108 திவ்ய தேசங்களில் 22-வது திவ்ய தேசமாக திகழ்கிறது. இது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இந்த கோவிலில் வருடம்தோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் நேற்று முன்தினம் காலையில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதற்கு முன்னதாக கோவில் பிரகாரத்தில் உற்சவர் புறப்பாடும், நான்கு வீதிகளில் கொடி புறப்பாடும் நடைபெற்றது.
அதன் பின் கொடியேற்றம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர். கோவில் ஊழியர்கள், கோவில் பட்டாச்சாரியார்கள், பக்தர்கள் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர். அதனை தொடர்ந்து விழா நாட்களில் உற்சவர், நான்காம் நாள் ஓலை சப்பர வீதியுலாவும், பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களிலும், ஏழாவது நாள் திருக்கல்யாணமும் நடைபெறும். இந்த திருவிழாவில் 9-ஆம் நாள் தேரோட்டமும், 8-வது நாள் வெண்ணைத்தாழி சேவையும், தீர்த்த வாரியும் நடைபெறும். பத்தாவது நாளில் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற உள்ளது.