மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சாணார்பாளையத்தில் ஓட்டுநரான முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கடை புதூர் அம்மன் கோவில் திருவிழாவில் கம்பம் நடுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் காட்டூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது முனிராஜ் மோட்டார் சைக்கிள் மீது கிருபாகரன் என்பவரது மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே முனிராஜ் பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த கிருபாகரனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.