வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் பகுதியில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்தத் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர். இந்நிலையில் தேரோட்டம் நடந்து கொண்டிருந்த போது ஒரு வீட்டின் அருகே நின்று சிலர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் குழந்தைகள் உட்பட 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.