மேட்டூர் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் இருக்கும் மேட்டூர் அருகே உள்ள கருமலைகூடல் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கருமலைக்கூடலில் கோவில் திருவிழாவையொட்டி நடந்த கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக உறவினரின் 4 வயது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று பார்த்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியபோது மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
வீட்டின் அருகே சென்ற போது மர்ம நபர்கள் அரிவாளால் ராஜேஷின் கழுத்தில் சரமாரியாக தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார் ராஜேஷ். அவருடன் வந்த 4 வயது குழந்தை இதை பார்த்தவுடன் அழுதுகொண்டே கூச்சலிட்டு ஓடியது. குழந்தையின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் அந்த கும்பல் ஓடிவிட்டது. ராஜேஷை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இதனால் கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீஸின் விசாரணையில் ராஜேஷுக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த லல்லு பிரசாந்த் என்பவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் லல்லு பிரசாந்த் மற்றும் அவரின் கூட்டாளிகளான வெள்ளையன், சிபி, அபிமன்யு, மதியலகன் உள்ளிட்ட 5 பேரும் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனால் போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ராஜேஷ் மீது கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.