சென்னை நந்தம்பாக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை தொடங்கி வைத்தார். சுமார் 300-க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திரை துறையையும், திமுகவையும் பிரிக்க முடியாது என்று உரையாற்றியுள்ளார். மேலும், “கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக பல்வேறு துறையினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் திரையுலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையை நம்பி லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர்.
தமிழ்நாடு தான் திரைத் துறையில் முத்திரை பதித்த மாநிலம். செய்தி துறையாக இருந்தாலும் சரி, திரை துறையாக இருந்தாலும் சரி தமிழ்நாடு நீண்ட வரலாறு கொண்டது ஆகும். அதோடு மட்டுமில்லாமல் தொழில்துறையில் முன்னேற்றம் காணவேண்டும் என்பதற்காக தான் நான் துபாய்க்கு சென்று வந்தேன். அதேபோல் மாநிலத்தின் உரிமைகளை உரிமையோடு கேட்க வேண்டும் என்பதற்காக தான் டெல்லி பயணம் மேற்கொண்டேன்” என்று தென்னிந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.