ஐக்கிய அரபு அமீரகத்தில் இனிமேல் சர்வதேச அளவில் திரையிடப்படும் வயது வந்தோருக்கான திரைப்படங்களில் காட்சிகள் நீக்கம் செய்யப்பட மாட்டாது எனவும், பெரியவர்களுக்கான குறைந்தபட்ச வயது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும், அமீரக அரசு ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் அறிவித்துள்ளது. இதுபற்றி அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அனைத்து நாடுகளில் உள்ளதுபோல் அமீரகத்தில் திரைப்படங்களை பார்க்கும் பார்வையாளர்களின் வயது வரம்பை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது இதில் பெரியவர்கள் மட்டும் பார்க்கும் திரைப்படங்களை காண சிறுவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
இவற்றிற்கு ஏற்கனவே வயது அடிப்படையில் பெரியவர்கள் பார்க்கும் தணிக்கை செய்யப்படாத திரைப்படங்களை காண குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தப் 18 வயதை தற்போது 21 வயதாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் கொண்டுவரப்படுகிறது. அது மட்டுமின்றி சர்வதேச அளவில் வெளியிடப்படும் திரைப்படக் காட்சிகளில் இனி மாற்றங்கள் செய்யப்படாது அல்லது தணிக்கையில் காட்சிகள் நீக்கப்படாது.
மேலும் திரையரங்குகளில் 21 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதையடுத்து அவர்கள் 21 வயது உடையவர்கள் என்ற அடையாள ஆவணம் அல்லது சான்றிதழை காட்ட வேண்டும். மேலும் வீடுகள் மற்றும் விமான நிலையங்களில் காட்சிப்படுத்தப்படும் திரைப்படங்களில் மட்டும் வயது வந்தோருக்கான காட்சிகள் மாற்றம் அல்லது நீக்கம் செய்யப்படும். இந்த புதிய மாற்றங்கள் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.