இந்திய திரையுலகில் அன்றும், இன்றும், என்றும் அமிதாப் பச்சன் இடத்திற்கு வேறொருவர் இல்லை என்ற அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சினிமாவில் பெரும்பாலான ஏற்றங்கள் மற்றும் இறக்கங்களைக் கடந்து 80 வயதில் இன்றைக்கும் தன் கலைப்பயணத்தை அமிதாப் பச்சன் உயிர்ப்புடன் தொடர்ந்து வருகிறார். தற்போது கடினமான உழைப்பால் திரைஉலகில் ஜொலிக்கும் அமிதாப் பச்சன் கடந்து வந்திருக்கும் பாதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். தொடர் முயற்சிக்குப் பிறகு அமிதாப் பச்சன் “புவன் ஷோம்”(1969) என்ற படத்தில் பின்னணி குரல் கலைஞராக திரை வாழ்க்கையை துவங்கினார்.
இதையடுத்து கே.ஏ.அப்பாஸ் தயாரித்த “சாத் ஹிந்துஸ்தானி” என்ற படம்தான் அவரை திரையில் அறிமுகப்படுத்தியது. இந்த படத்தில் 7 நாயகர்களில் ஒருவர் ஆக அமிதாப் பச்சன் நடித்திருந்தார். அதன் பின் அவருக்குத் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துகொண்டு இருந்தாலும், அவர் நடித்த படங்கள் பெரும்பாலானவை தோல்வியிலேயே முடிந்தது. இதனால் ஒரு காலக்கட்டத்தில் தொடர்ந்து 12 தோல்விப் படங்களை அவர் கொடுத்தார். அதனைத் தொடர்ந்துதான் சான்ஜீர் என்ற படம் வெற்றியடைந்தது. இதனிடையில் அமிதாப் பச்சன் கல்லீரல் 75% பாதிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி அமிதாப் பச்சனை அரியவகை நோயான தசைக்களைப்பு நோய் தாக்கியது. இந்நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு பிடிமானம், நடை, பேச்சு ஆகிய செய்கைகளில் அதிக இடர்பாடுகள் ஏற்படும். இதை முழுமையாக குணப்படுத்த முடியாது. எனினும் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். கடந்த 2020ல் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கிட்டத்தட்ட 3 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதன்பின் இந்த வருடமும் அவர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டார். 2 முறையும் கொரோனாவை வென்று அமிதாப் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற 50 வருடங்களில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அமிதாப் பச்சன் “தி கிரேட் கேட்ஸ்பி”(2013) ஆங்கில படத்தின் வாயிலாக ஹாலிவுட்டிலும் தோன்றினார். 3 பத்ம விருதுகள், சிறந்த நடிகருக்கான 4 தேசிய விருதுகள், கடந்த வருடத்தின் இறுதியில் பால்கே விருது போன்ற அங்கீகாரங்களுடன் தடைகளை கடந்து அமிதாப் பச்சன் கம்பீரமாக பயணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.