சிவகங்கை காளையார்கோவில் அருகே திறந்தவெளி சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீரென மரணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வன் என்ற மகன் இருந்தார். தமிழ்ச்செல்வன் மதுரை சிறையில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கியதன் காரணமாக தண்டனை பெற்று வந்தார். சிவகங்கை காளையார்கோயில் அருகே புரசடிஉடைப்பு கிராமத்தில் திறந்தவெளி சிறைச்சாலை தொடங்கப்பட்டுள்ளது. அதன்பின் தமிழ்ச்செல்வன் திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். திடீரென நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வனுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தமிழ்ச்செல்வன் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த மரணம் குறித்து காளையார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து இளையான்குடியில் மாஜிஸ்திரேட்டு சுனில்ராஜா மருத்துவமனைக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, ஒன்றிய குழு உறுப்பினர் முத்துக்கருப்பன் மற்றும் ஒன்றிய செயலாளர் உலகநாதன் ஆகியோர் தமிழ்ச்செல்வன் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். மேலும் இறந்த தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டி கூறியுள்ளார். மேலும் சிறையில் உள்ள கைதிகளின் குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.